Published Date: February 12, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES
ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு அங்கிருக்கும் தொழில் முனைவோரின் பங்கு அடிப்படையானது. உலக அளவில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் புதுமையான முயற்சிகள், தொடர் உழைப்பு, வித்தியாசமான சிந்தனை என தொடர்ந்து தங்களுடைய தொழிலுக்காக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கும் தொழில் முனைவோரை கௌரவிக்கும் விதமாக நாணய விகடன் 'பிசினஸ் ஸ்டார்' விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 8-ம் ஆண்டு விருது விழா 07-02- 25 அன்று, சென்னை ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா .சீனிவாசன். அவர் பேசும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதி ஆலோசனை வழங்குவதற்காக விகடன் நிறுவனம் லாபம் என்ற புதிய முயற்சியை தொடங்கியிருப்பதை பற்றி குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினரும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் உள்ள டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். அதில் இன்று நாம் ஏ.ஐ காலத்தில் இருக்கின்றோம். உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கிறது. நம்முடைய இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நாம் வேகமாக எட்ட ஐ.டி துறையில் புத்தாக்கங்களைச் செய்ய வேண்டும். இதுபோன்ற மாற்றத்துக்கு அடிப்படைத் தேவை மனித வளம். அந்த வகையில் பார்த்தால் சிறந்த மனித வளம் நம்மிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ.ஐ தொழில்நுட்பம் சில காலங்களுக்கு ஒரு முறை மாற்றங்களை எதிர்கொண்டு புதுமை தன்மை உடன் பயணமாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை, தமிழக இளைஞர்கள் எப்படி ஏற்றுக்கொண்டு, கற்று, முன்னேறி வரப் போகிறார்கள் என்பது முக்கியம்.
'நான் முதல்வன்' போன்ற திட்டங்களின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி தொழில்நுட்ப மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை வளர்ப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று உற்சாகமூட்டிப் பேசினார்.
Media: VIKATAN